Saturday, May 9, 2009

சித்ரா பௌர்ணமி..

பௌர்ணமி என்பதே மிக அழகான ஒரு வார்த்தை.. மிகப் பெரிய வட்டமாய் அம்மாவின் நெற்றிப் பொட்டு போன்று கன கச்சிதமாய் வானில் ஒட்டிக் கொண்டு பாந்தமாய் ஒளிர்ந்துக் கொள்ளைக் கொள்ளும் மனதை அந்த பௌர்ணமி நிலவு.. மொட்டை மாடியில் முகத்தை வருடும் காற்று சும்மா செல்லாமல் என் கூந்தலையும் இழுத்து செல்லும்.. இதமான அந்த இரவு நேரத்தில் தூரத்தில் இருக்கும் நிலவு தரும் குளுமை கொஞ்ச நஞ்சமல்ல..

சித்ரா பௌர்ணமி அன்று நிலா சற்று பெரியதாக வியப்பூட்டும்.. இருபத்திரண்டு பேர் [ஐந்து குடும்பம்] கொண்ட கூட்டுக் குடும்பம் எங்களுடையது.. சித்ரா பௌர்ணமி அன்று வகை வகை வகையாய் சமைத்துக் கொண்டு பெண்கள் அனைவரும் சித்ரா பௌர்ணமி கொண்டாட்டங்களை ஆரம்பிப்பார்கள்.. ஐந்து மருமகள்களும் சிரித்துக் கொண்டும், கதை பேசிக் கொண்டும் சமைப்பதை வீட்டின் வாண்டுகள் மொட்டை மாடிக்கு ஒன்றன் பின் ஒன்றாக எடுத்து சென்று நேர் படுத்தி வைக்க.. பின்பு மொத்தக் குடும்பமும் மாடியில் கூடியதும் சின்ன சின்ன விளையாட்டுகளில் ஆரம்பிக்கும் எங்கள் சித்ரா பௌர்ணமி கொண்டாட்டங்கள்.. பாட்டு.. ஆட்டம்.. என இரவு களைகட்டும்..


வாண்டுகள் சிறிது சோர்ந்து போகும் போது சமைத்ததை பரிமாற ஆரம்பிப்பார்கள் சமைத்த அன்னைகள்.. சாப்பிட்டு முடித்த வாண்டுகள் மீண்டும் தெம்புடன் ஆட்டத்தை ஆரம்பிப்பார்கள்.. பின்பு அனைவரும் உண்டு முடித்த பின்பு.. பாட்டுக்கு பாட்டு ஆரம்பிக்கும்.. மொத்த குடும்பமும் இரண்டு பிரிவாக பிரிந்து நிற்கும் தருணம் இது ஒன்று தான்.. பழைய பாடல்களில் இன்பம் கொள்ளும் பெரியோர்களும் சரி.. லேட்டஸ்ட் குத்து பாட்டு பாடும் பொடுசுகள் ஆனாலும் சரி.. அல்ல காதல் பாடல்களில் முங்கி எழும் இளசுகள் ஆகட்டும்.. அனைவருமே அடுத்து இந்த நாள் என்று வரும் என யோசிக்க வைக்கும் அளவுக்கு இருக்கும் அந்த சந்தோஷங்கள்!!

இந்த வருடம் ஏதேதோ காரணத்தால் எங்கள் வீட்டின் சித்ரா பௌர்ணமி கூட்டாஞ்சோறு இன்பம் கிட்டாமல் போயிற்று.. இன்பம் கிட்டாமல் போனது எங்களுக்கா அல்லது எங்களின் சந்தோஷ பரிமாறலை இந்த வருடம் பார்க்க இயலாமல் போன அந்த வட்ட முகம் கொண்ட நிலவுக்கா?!

குடும்பத்துடன் மொட்டை மாடிக்கு சென்று இன்பமாக நேரம் கழிக்க சித்ரா பௌர்ணமி ஒரு சாக்காக உள்ளதே தவிர.. அமாவாசையும் சித்ரா பௌர்ணமி தான் எங்களுக்கு அனைவரும் ஒன்றாக சாப்பிட அமரும் பொழுது !!

சேர்ந்து உண்ண என்னுடன் நீ இருக்கும் வரை..
நிலாச்சோறு தான் நாம் உண்ணும் ஒவ்வொரு வேளை உணவும்..

சேர்ந்து வாழ என்னுடன் நீ இருக்கும் வரை..
பௌர்ணமி இரவுகள் தான் எனக்கு ஒவ்வொரு இரவும்..




4 comments:

புதியவன் said...

சித்ரா பௌர்ணமி நினைவுகளின் நிலவொளியில் நானும் நனைந்தது போல் இருந்தது உங்கள் பதிவை படித்ததும்...

//அமாவாசையும் சித்ரா பௌர்ணமி தான் எங்களுக்கு அனைவரும் ஒன்றாக சாப்பிட அமரும் பொழுது !!//

மிகவும் ரசித்தேன் இந்த வரிகளை...

கொடும்பாவி-Kodumpavi said...

சேர்ந்து உண்ண என்னுடன் நீ இருக்கும் வரை..
நிலாச்சோறு தான் நாம் உண்ணும் ஒவ்வொரு வேலை உணவும்..

வேளை ?

ச. ராமானுசம் said...

சித்ரா பௌர்ணமி

என் சித்ரா
என் வானில்
என்றுமே பௌர்ணமி.

MaDhi said...

நன்றி புதியவன் வந்ததிற்கும் ரசித்ததிற்க்கும் ,
நன்றி கொடும்பாவி படித்ததிற்கும் திருத்தம் சொன்னதிற்கும்..
வருகைக்கு நன்றி இராமானுசம்!!