அம்மா மாட்டி விட்ட புத்தம் புது மழை அங்கி மற்றும் குல்லாவின் பாதுகாப்பில் தலையில் மழை துளிகள் பட்டு தெறிக்க தெறிக்க காகித கப்பல்கள் மழை நீரில் மூழ்க மூழ்க சற்றும் சோர்ந்து போகாமல், மீண்டும் மீண்டும் கப்பல்கள் செய்து மழையில் நனையாமல் காப்பற்றி, பின்பு தண்ணீரில் அதனை விட்ட காலங்கள் நான் மழலை பள்ளியில் படித்துக் கொண்டிருந்த காலங்கள்..
அம்மா கத்த கத்த மழை அங்கி மாட்ட மறுத்து, கையில் குடையை பேருக்கு எடுத்துக் கொண்டு தேங்கி நிற்கும் மழை தண்ணியில் குதித்து ஓடி சக வயது பிள்ளைகளுடன் மழையில் நனைந்தும் நனையாமலும் கால்களை மட்டும் புதிதாக விழும் மழை துளிகளில் நனைத்துக்கொண்டு இருந்த பருவம் மழலை பருவத்தை கடந்துவிட்ட பெருமையை தலையில் ஏற்றி வைத்து எடை கூடி இருந்த பருவம்..
அம்மாக்கு தெரியாமல், தங்கையுடன் மொட்டை மாடிக்கு ஓடி சென்று, பெரிதாக விழும் மழை துளியில் முழுக்க நனைந்து ஆட்டம் போட்டு மழை நின்றும் மொட்டை மாடியின் தரையில் தேங்கி நிற்கும் தண்ணிரில் படுத்து உருண்டு கொண்டு கதை பேசி சிரித்து, குளிரில் நடுங்கி, மாடியில் இருந்து கீழே செல்ல மனம் இல்லாமல் சென்று அம்மாவிடம் திட்டு வங்கி கொண்டே உடை மாற்றிய தருணங்கள், பதின் பருவத்தில் பசுமையாய் மனதில் பதிந்து போன தருணங்கள்..
அம்மா மழை பெய்கிறதே கல்லூரியில் இருந்து வரும் நான் மழையில் மாட்டிக் கொள்வேனோ என பதறி வாசலில் காத்திருக்க, நானோ தோழிகளுடன் மழையில் ஆட்டமும் பாட்டாக கலாட்டா செய்து கொண்டு, ஓடி பிடித்து விளையாடி கொண்டு, கேண்டினில் சூடாக பஜ்ஜியும், சில்லுன்னு ஐஸ்கிரீமும் வாங்கி சுவைத்துக் கொண்டு, மழையுடனே வீட்டிற்க்கு வந்து சேர்ந்த அந்த நிமிடங்கள் நான் கல்லூரி பறவையாக வாழ்க்கையை மிக மிக ரசித்து, ஒவ்வொரு நாழிகையும் வாழ்ந்த நிமிடங்கள்..
அம்மா போட்டு கொடுத்த சூடான சேமியா உப்புமா கிண்ணத்துடன், மாடியில் ஒரு ஓரமாய் நின்று கொண்டு, மழையில் இறங்கி ஆட்டம் போட்டா எப்படி இருக்கும் என நினைத்துக் கொண்டே, கையில் இருந்த உப்புமாவை காலி செய்துவிட்டு, படிக்க நல்ல புத்தகம் ஒன்றை எடுத்து வைத்துக் கொண்டு, கண்ணை புத்தகத்தில் வைத்து விட்டு, காதை மழை துளிகளின் சத்தத்தில் ஒட்டி வைக்கும் அந்த நாட்கள், வேலைக்கு சென்று விட்டு மிகவும் அயர்ந்து வீட்டுக்கு திரும்பிய எனது புதிய பழைய நாட்கள்..
அம்மா எவ்வளவு தான் கத்தினாலும், ஐபாட் புண்ணியத்தில் காது கேட்காமல் ஜன்னலின் ஓரத்தில் நின்று, கண்களால் மழை துளிகளை காதலித்துக் கொண்டு, வாழ்க்கையில் தொலைத்த சில பருவங்கள், புன்னகைகள், விஷயங்கள், காலங்கள், மற்றும் பலவற்றை நினைத்து கண்கள் கலங்கி மழைத் துளிகளினுள்ளே கரைந்து போய்விட மனம் துடிக்கும் பொழுதுகள், இன்றைய நிஜங்கள் என்ன என்று எனக்கு புரிய வைக்கும் இந்த நிகழ்கால பொழுதுகள்!!
மழை பொழுதுகள் சில நேரம், சாலைகள் மற்றும் செடி கொடிகளை மட்டும் இன்றி, தேவை இல்லாத விஷயங்கள் மண்டி போயிருக்கும் மனதையும் கூட கழுவி புதியதாய் விட்டு தான் செல்கிறது, நாம் விரும்பினால் மட்டும்!!
மழை – வேண்டும் என்று வேண்டினாலும் வராது, வேண்டாம் என்று விரட்டினாலும் நிற்காது காதலைப் போல!!
மழையின் முதல் துளிகள்!!
முதல் முதல் காதலுடன் உன்னை பார்த்து சிரித்த அன்று
மனதிற்குள் அத்தனை இனிப்பாக சிறு தூறல்கள்..
முதல் முறை நீ கை பற்றிய போது
தூறல்கள் சுகமான சாரலாய் மாறி விட்டு இருந்தது..
முதல் முறை உன்னிடம் சண்டையிட்ட போது
மனதில் மட்டுமின்றி கண்ணிலும் மழை..
முதல் ஊடலுக்குப் பின் வந்த கூடலில்
கொஞ்சம் அதிகப் படியான முத்த மழையும் பொழிந்தது..
முதலும் கடைசியுமாக என் இதயத்தை
சில்லாக உடைத்து விட்டு நீ சென்ற நாளில் தான்
என்னுள் புயல் காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்தது..
அன்று முதல் இன்று வரை தினமும் மனதில் மழை தான்..
இதில் கண்களில் கட்டுக்கடங்காத வெள்ளம் வேறு!!
-
மதி
2 comments:
Miga Arumai !!
adikadi vandhu padichitu comments sollunga :)
Post a Comment